இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 2,250 கிலோகிராம் எடையுடைய அடுத்த தலைமுறை வழிகாட்டு செயற்கைக்கோளான என்விஎஸ்-03 திட்டமிடப்பட்ட புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவிக்கையில்,
ஜிஎஸ்எல்வி-எப்18 ரொக்கெட் என்விஎஸ்-03 செயற்கைக்கோளை திட்டமிடப்பட்ட நீள்வட்டப் பாதையில் மிகத் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது.
இந்தச் சாதனையை நிகழ்த்திய இஸ்ரோவின் அனைத்து குழு உறுப்பினர்கள், தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கும் வாழ்த்துகள்.
ரொக்கெட்டின் அனைத்து அமைப்புகளும் எதிர்பார்த்தபடி சிறப்பாகச் செயல்பட்டன.
என்விஎஸ்-03 அடுத்த தலைமுறை வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பின் மூன்றாவது செயற்கைக்கோளாகும். இந்திய பிராந்திய வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பான IRNSS அல்லது ‘நேவிக்’ (NavIC) மூலம் வழங்கப்படும் வழிகாட்டு சேவைகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.கலாச்சாரம் காண்
இந்த செயற்கைக்கோள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள L5 மற்றும் S அலைவரிசை சமிக்ஞைகளுடன் L1 சமிக்ஞையையும் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்திய நிலப்பரப்பு மற்றும் இந்திய எல்லைகளிலிருந்து சுமார் 1,500 கிலோமீற்றர் வரையிலான பிராந்தியத்தில் சேவைகளை வழங்க முடியும்.
‘நேவிக்’ என்பது இந்தியாவின் சுதந்திரமான வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பாகும். இந்தியாவிலும், இந்திய நிலப்பரப்பிலிருந்து சுமார் 1,500 கிலோமீற்றர் தொலைவு வரையிலான பிராந்தியத்திலும் உள்ள பயனர்களுக்கு துல்லியமான இருப்பிடம், வழிகாட்டுதல் மற்றும் நேரக் கணிப்பு சேவைகளை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகள் பணி ஆயுட்காலத்தைக் கொண்ட என்விஎஸ்-03 செயற்கைக்கோள், நேவிக் செயற்கைக்கோள் தொகுப்பின் செயல்பாட்டை மீண்டும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முந்தைய செயற்கைக்கோளான என்விஎஸ்-03 ஐ திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த இஸ்ரோவால் முடியாததால், நேவிக் தொகுப்பின் செயல்பாடு பாதிக்கப்பட்டிருந்தது.
தற்போது என்விஎஸ்-03 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதன் மூலம், நான்கு செயற்கைக்கோள்களைக் கொண்ட நேவிக் தொகுப்பு அதன் குறைந்தபட்ச செயல்பாட்டு நிலைக்கு மீண்டும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மூன்று செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் செயல்பட்டு வரும் நிலையில், என்விஎஸ்-03 செயற்கைக்கோளையும் சேர்த்து மொத்தம் நான்கு செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியாவுக்கு தன்னிச்சையான நிலை, வழிகாட்டுதல் மற்றும் நேரக் கணிப்பு (PNT) சேவைகளைப் பெறுவதற்கான வசதி கிடைத்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் ரயில்கள், வாகனங்கள் மற்றும் கப்பல்களை நிகழ்நேரத்தில் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ‘ஒரே நாடு ஒரே நேரம்’ திட்டத்தின் முக்கிய அங்கமாகவும் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, என்விஎஸ்-03 செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கலாச்சாரம் காண்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தத் திட்டம் இந்தியாவின் உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான நேவிக்கை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும் திறமையும் தொடர்ந்து நாட்டுக்கு பெருமை சேர்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.