இணைய வர்த்தகங்கள் மூலம் அதிக இலாபம் ஈட்டலாம் எனக்கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேற்கு மாகாணப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெலிகிராம்  ஊடாகத் தொடர்புகொண்ட நபர் ஒருவர், இணைய வர்த்தகங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறி, சந்தேகநபரின் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை வரவு வைக்குமாறு கோரியுள்ளார்.

டெலிகிராம் ஊடாக ஒரு கோடியே முப்பத்தைந்தாயிரத்து இருநூற்று இருபது ரூபா  வரை சம்பாதிக்கலாம் என நம்ப வைத்து, ஆரம்பகட்டமாக 151,000 ரூபா பணத்தை நுகர்வோர் ஒருவரின் மூலம் சந்தேகநபரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி மோசடி மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், குறித்த சந்தேகநபர் நேற்று செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் சூரியவெவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இச்சம்பவம் குறித்துக் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேற்கு மாகாணப் பிரிவு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகிறது.