மொரட்டுவை, சொய்சாபுர பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பியோடிய துப்பாக்கிதாரிகள் பறித்துச் சென்ற மோட்டார் சைக்கிள், பிலியந்தலை, சித்தம்முல்ல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (20) இரவு 8.30 மணியளவில் சொய்சாபுர பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அதன் உரிமையாளர் உயிரிழந்ததுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காயமடைந்த பெண் வாடிக்கையாளர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், T-56 ரகத் துப்பாக்கியால் ஹோட்டல் உரிமையாளரை இலக்கு வைத்துச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் பயணித்த காரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், பிலியந்தலை, சுவாரபொல பகுதியில் காரைக் கைவிட்டுவிட்டு, வான்நோக்கி துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவரை அச்சுறுத்தி அவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளைப் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
அவ்வாறு பறித்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள், சித்தம்முல்ல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கிதாரிகள் வந்த காரின் இலக்கத் தகடும் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் கீழே விழுந்திருந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.