உறுதியளித்தபடி சேவை வழங்காததால், மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளருக்கு விடுதி நிறுவனம் ரூ.3.20 லட்சம் திருப்பி செலுத்த சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஆர்.ஸ்ரீதர். இவர் கொடைக்கானலுக்கு சென்ற நிலையில், அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது, அந்நிறுவனத்தின் பிரதிநிதி கூறிய கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி ரூ.3.30 லட்சம் செலுத்தி 10 ஆண்டு கால ‘ஸ்டெர்லிங் வான்டேஜ்’ உறுப்பினர் திட்டத்தில் சேர்ந்தார்.
ஆண்டுதோறும் பாயிண்டுகள், இலவச வரவேற்பு, தங்கும் நாட்கள் மற்றும் எந்த பருவத்திலும் முன்னுரிமை முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஸ்ரீதர் கேரள மாநிலம் வயநாட்டிலுள்ள விடுதியில் தனது குடும்பத்தினருடன் தங்குவதற்கு முன்பதிவு செய்ய முயன்றபோது, பல நிபந்தனைகளை கூறி நிர்வாகம் முன்பதிவை நிராகரித்தது.
அதேநேரம், தனியார் முன்பதிவு செயலிகளில் அதே விடுதியில் அறைகள் காலியாக இருந்தது தெரியவந்தது. மேலும், பருவகால கட்டுப்பாடுகள் அடங்கிய பட்டியலை உறுப்பினர் சேர்ந்த ஓராண்டு கழித்தே அந்நிறுவனம் பகிர்ந்ததும் தெரியவந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீதர், சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஆணையத் தலைவர் பி.ஜிஜா மற்றும் உறுப்பினர்கள் வி.ராமமூர்த்தி, ஜே.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது “உறுப்பினர் சேர்க்கையின் போது உண்மைகளை மறைத்து, பின்னர் கட்டுப்பாடுகளை விதித்தது சேவை குறைபாடு மற்றும் முறையற்ற வணிக நடவடிக்கையாகும்.
எனவே, பாதிக்கப்பட்ட ஸ்ரீதருக்கு உறுப்பினர் கட்டணத்தில் ரூ.3 லட்சம், சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.3.20 லட்சத்தை 8 வார காலத்துக்குள் எதிர்மனுதாரர்கள் வழங்க வேண்டும்” என ஆணையம் உத்தரவிட்டது.