ரத்னா புக்ஸ் பதிப்பகம், மெட்ராஸ் புக் கிளப் சார்பில் எழுத்தாளர் கே.பாரதி எழுதிய ‘ரங்க நாயகி’ என்ற தமிழ் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘தி ஸ்டோன் இன் தி பேக்யார்டு - தி ஸ்ரீராஜபுரம் சாகா’வின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது.
இந்நூலின் மொழிபெயர்ப்பாளரான பேராசிரியர் டி. ஸ்ரீராமன், எழுத்தாளர் கே.பாரதி ஆகியோருடன் நாவல் குறித்தும், அதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கவிதா முரளிதரன் கலந்துரையாடினார்.
அப்போது எழுத்தாளர் கே.பாரதி பேசும்போது, “பெண்கள் ஒரு வீட்டின் இன்றியமையாத அங்கம். ஆனால் பல நூற்றாண்டுகளாக அவர்கள் மவுனமாக்கப்பட்டே வருகின்றனர். அவர்களது குரல் எங்கும் ஒலிக்காமல், எவராலும் கேட்கப்படாமலும் உள்ளது.
இதை கருத்தில் கொண்டே எனது நாவலுக்கு இந்த தலைப்பை வைப்பது பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்தேன். இந்த நாவல் முழுவதும் ‘கல்’ ஒன்று மவுன சாட்சியாக பயணிக்கிறது. இது பெண்களின் நிலையை விளக்கும் ஒரு மிகச்சிறந்த உருவகமாகும்.
வரலாற்றில் வீட்டைவிட்டு வெளியேறி பொது வாழ்வில் புரட்சி செய்த பெண்களைப் போலவே, குடும்பத்துக்குள் பெண்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு சிறிய அடியும் சமூக முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமானது; முக்கியமானது.
ஏனெனில், அந்த மாற்றங்கள் மிகவும் நிலையானவை. அத்தகைய தொடர்ச்சியான நிலைத்தன்மைதான் பெண்களை இன்றைய வளர்ச்சி நிலைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது” என்றார்.
மொழிபெயர்ப்பாளர் டி.ஸ்ரீராமன் பேசியபோது, “ஒரு படைப்பை மொழிபெயர்ப்பாளரிடம் ஒப்படைப்பது என்பது, தான் பாசமாக வளர்த்த மகளை மற்றொரு குடும்பத்துக்கு திருமணம் செய்து கொடுப்பது போன்றது” என்றார்.