புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அவர்களுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை காலை (23.09) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் ப.சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், துரைராசா ரவிகரன், மருத்துவர் ஶ்ரீநாத் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தினால் உருவாகிவரும் தொடர் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் பல்வேறு விடயங்கள் நேரடியாக அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டது.கலந்துரையாடலின் நிறைவில், வவுனியா வெடுக்குநாறிமலை விவகாரம், யாழ்ப்பாணம் நல்லூர் மந்திரிமனை புனரமைப்பு, திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் தலையீடு மற்றும் மட்டக்களப்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் போடப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட தொல்பொருள் திணைக்களம் சார்ந்து காணப்படும் பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்ப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதாக இதன்போது அமைச்சர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்தார்.