மட்டேகொட வீடமைப்புத் திட்டப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் திருத்தக நிலையமொன்றில் புதன்கிழமை (23) பிற்பகல் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் முற்றாக அழிந்துள்ளன.குறித்த திருத்தகத்திற்குப் பழுதுபார்ப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றின் எரிபொருள் தொட்டியை கழற்ற முயன்றபோதே இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மட்டேகொட பொலிஸார் தெரிவித்தனர். எரிபொருள் தொட்டியில் தீப்பற்றியதைக் கண்ட கடை உரிமையாளர், உடனடியாக அதனை அப்புறப்படுத்திவிட்டு கடையை விட்டு வெளியே ஓடியதால் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.உரிமையாளர் வெளியேறிய கணத்திலேயே தீப்பற்றிய எரிபொருள் தொட்டி வெடித்துச் சிதறியதால், தீ மிக வேகமாகப் பரவியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இச்சம்பவத்தில் உயிர்ச்சேதமோ அல்லது காயங்களோ எதுவுமின்றி எவரும் தப்பிய போதிலும், திருத்தகத்திலிருந்த 10 மோட்டார் சைக்கிள்கள், மின் பிறப்பாக்கி (Generator) மற்றும் பெருமளவிலான திருத்த உபகரணங்கள் உட்பட 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் முற்றிலும் தீ கரையாகியுள்ளன.தொடர்ந்து, மட்டேகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினரும் அப்பகுதி பொதுமக்களும் இணைந்து, தீ அருகிலுள்ள ஏனைய கடைகளுக்குப் பரவாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.அதனைத் தொடர்ந்து கோட்டே தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டேகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.