எதிர்காலத்தில் எந்தவொரு அரசாங்கத்தையும் அமைப்பதற்கும் ஆட்சியை முன்னெடுப்பதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பங்களிப்பு இன்றியமையாதது எனவும், பிளவுபட்டுள்ள தரப்பினரை மீண்டும் ஒன்றிணைக்கும் வகையில் தயாசிறி ஜயசேகரவை கட்சிக்குள் கொண்டுவருவதற்கான இரகசியப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் உப செயலாளர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (19)  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாற்றுத்திறனாளிக் குழந்தையைப் பெற்றோர் கைவிடாது வளர்ப்பதைப் போன்று, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் பாரம்பரிய பிரதான கட்சிகள் மீது பெரும்பான்மை சிங்கள மற்றும் தமிழ் மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி அரசாங்களை அமைத்த வரலாற்றை நீண்ட வரலாறு கொண்ட கட்சிகள் சவால்களைச் சந்திப்பது இயல்பானது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்ற காலத்தில் 8 ஆசனங்களுக்குத் தள்ளப்பட்டு, தலைவர்களுக்கு 25 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டபோதும், விஜய குமாரதுங்க, எஸ்.பி. திசாநாயக்க மற்றும் இடதுசாரிகள் பிரிந்து சென்றபோதும் மக்களின் ஆதரவோடு சுதந்திரக் கட்சி மீண்டெழுந்தது.

கட்சி எதிர்கொண்ட 21 நீதிமன்ற வழக்குகளில் 20 வழக்குகள் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவின் வழிநடத்தலில் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டன. பொதுச்செயலாளர் பதவி தொடர்பான நீதிமன்றத் தீர்மானங்களை அனைவரும் ஏற்று, ஜனவரி வரை இழுத்தடிக்காது நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என நீதிபதிகளும் ஆலோசனை வழங்கியுள்ளனர். 2020 குருநாகல் தேர்தலில் 28 கூட்டங்களில் உரையாற்றி வெற்றிபெறச் செய்த தயாசிறி ஜயசேகர மீது தனிப்பட்ட பகைமை இல்லை எனவும், கொள்கை மீறல் சர்ச்சைகளைத் தீர்த்து அவருக்கு தேசிய அமைப்பாளர் பதவியை வழங்கி மீண்டும் இணைத்துக்கொள்ள உப தலைவர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் இரவு முழுவதும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கட்சிப் பிளவுகள் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பிற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கட்சியை ஒன்றிணைக்க முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தவறான ஊடகப் பிரச்சாரங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ஊடகங்களில் பொய்யான செய்திகள் மூன்று அங்குல அளவில் பெரிதாகவும், உண்மைகள் சிறிய மூலையிலும் பிரசுரிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், சுதந்திரக் கட்சியை எவராலும் முடக்கவோ அழிக்கவோ முடியாது எனவும், நாளை உதயத்தில் கட்சி முன்னெப்போதையும் விடப் பலத்துடன் மீண்டெழும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.