இலங்கைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய அரியவகை உயிரினமான எறும்புத்தின்னியை கொன்ற சம்பவம் தொடர்பில், பாடசாலை மாணவன் ஒருவனின் கையடக்கத் தொலைபேசியில் இருந்த காணொளியை ஆசிரியர் ஒருவர் கண்டறிந்ததைத் தொடர்ந்து, மெதிரிகிரிய பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிது காலத்திற்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியிருந்தது. இந்நிலையில், பாடசாலைக்கு மாணவன் ஒருவர் கொண்டு வந்திருந்த கையடக்கத் தொலைபேசியை ஆசிரியர் ஒருவர் பரிசோதித்த போதே இந்தக் கொடூரச் செயலின் காணொளி முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலைத் தொடர்ந்து மெதிரிகிரிய பொலிஸாரும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த கூட்டு விசாரணையின் போது, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பல வீடுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இடங்கள் சோதனையிடப்பட்டன. இதன்போது வயது வந்த நபர் ஒருவரும், சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எறும்புத்தின்னியைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் பிரதான நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எறும்புத்தின்னிகள் அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளதாகவும், இலங்கை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட வேண்டியவை எனவும் சுற்றாடல் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.