இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வரலாற்று ரீதியான பிணைப்பை விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தின் ஊடாக மீள உறுதிப்படுத்துகின்ற வகையில், இலங்கை தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரையான ராமர் சேது கடற்பரப்பை நீந்திக் கடப்பதற்கு இந்தியத் தம்பதியினர் விசேட சாதனை முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளனர். மனிபால் வைத்தியசாலையினது ஏற்பாட்டிலே முன்னெடுக்கப்படுகின்ற இந்தச் சவாலான கடல் கடந்த நீச்சல் பயணமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் கலாசாரப் பகிர்வையும் பறைசாற்றுகின்ற ஒரு வரலாற்று மைல்கல்லாக அமையவுள்ளது என மனிபால் வைத்தியசாலையினது சர்வதேச சுகாதார சேவைகள் மற்றும் மூலோபாய கூட்டாண்மைக்கான குழு ஆலோசகர் ஜித்து ஜோஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த வியாழக்கிழமை (30) கொழும்பு த கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பிலே, சாதனை முயற்சியில் ஈடுபடவுள்ள தடகள வீரர்களான டேனிஷ் அப்டி மற்றும் விருஷாலி பிரசாத் மனிபால் மருத்துவமனை குழுவினது வீணா சுரம் மற்றும் இலங்கையினது பிளாஷ் ஹெல்த்கேர் நிறுவனத்தினது தலைமை நிறைவேற்று அதிகாரி அஷேத் ரணசிங்க உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர் இந்த சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விடயம் குறித்து ஜித்து ஜோஸ் மேலும் தெரிவிக்கையில்,
மனிபால் வைத்தியசாலை கடந்த 73 ஆண்டுகால அனுபவத்துடன் இந்தியாவிலே மிகப்பெரிய தனியார் மருத்துவ வலையமைப்பாகத் திகழ்கின்றது. ராமர் சேது கடல் பாதையிலே இலங்கை மற்றும் இந்தியாவை இணைக்கவுள்ள இந்தத் தம்பதியினரை அறிமுகப்படுத்துவதிலே பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த நீச்சல் சாதனை என்பது வெறும் உடல் உறுதி சார்ந்த விடயம் மட்டுமல்ல இது எமது பகிரப்பட்ட வரலாறு மற்றும் பாரம்பரியத்துக்குச் செய்கின்ற மரியாதையாகும். ஒரு சுகாதார நிறுவனமாக, இந்த வீரர்களது விடாமுயற்சி மற்றும் ஆரோக்கியத்துக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குகிறோம்.
இலங்கை நோயாளிகள் நீண்டகாலமாக மனிபால் வைத்தியசாலையை நம்பி வருகின்றனர். குறிப்பாகப் புற்றுநோய் சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிக்கலான சிகிச்சைகளுக்காக இலங்கையிலிருந்து ஏராளமானோர் எம்மிடம் வருகின்றனர். இந்த நீச்சல் சாதனை ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் என நம்புகிறோம். இந்தச் சாதனைப் பயணத்துக்கு இலங்கையினது 'த கிங்ஸ்பரி கொழும்பு' ஹோட்டல் விருந்தோம்பல் பங்காளராக இணைந்துள்ளதுடன், மனிபால் மருத்துவமனையினது முதன்மை செயல்பாட்டு அதிகாரி கார்த்திக் ராஜகோபாலும் இந்த முயற்சிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.
இவ் ஊடக சந்திப்பிலே கலந்துகொண்ட இந்தியத் தடகள வீரர்களான டேனிஷ் அப்டி மற்றும் விருஷாலி பிரசாத் ஆகிய தம்பதியினர் தமது தயார்படுத்தல்கள் குறித்து விளக்குகையில்,
கடந்த 2022 ஆம் ஆண்டு எதேச்சையாகத் தொடங்கிய இந்த நீச்சல் பயிற்சி, இன்று எமது வாழ்வினது ஒரு அங்கமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு நீரிலே மூழ்குகின்ற அபாயத்திலிருந்து தப்பிய ஒரு சம்பவமே எமக்கு நீர்நிலைகளைக் கண்டு அச்சப்படாமல், எம்மை நாமே பாதுகாத்துக்கொள்கின்ற வல்லமையைப் பெறுவதற்குத் தூண்டியது. வரும் மே 5 ஆம் திகதி நாம் படகு மூலம் தலைமன்னாரைச் சென்றடைவோம். பின்னர் மே 6 ஆம் திகதி அதிகாலை 4:00 மணியளவில் தலைமன்னார் கரையிலிருந்து எமது நீச்சல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளோம். எவ்வித ஓய்வுமின்றி மாலைக்குள் இந்தியாவினது தனுஷ்கோடி கரையை அடைவதே எமது இலக்காகும்.
கடலிலே காணப்படுகின்ற ஜெல்லி மீன்களது அச்சுறுத்தல், திசைமாறுகின்ற நீரோட்டங்கள், சுழல்கள் மற்றும் அலைகளது சீற்றம் எனப் பல சவால்கள் எமக்கு முன்னால் உள்ளன. இருப்பினும், ஒரு தம்பதியாக ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்திக்கொண்டு இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிப்போம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. நீச்சல் என்பது ஒரு வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒவ்வொருவரும் கற்க வேண்டிய உயிர் காக்கும் கலை என்பதை இந்தச் சாதனையின் மூலம் உலகுக்கு உணர்த்த விரும்புகிறோம் எனத் தெரிவித்தனர்.
தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான ராமர் சேது கடற்பரப்பை நீந்திக் கடக்க இந்தியத் தம்பதி சாதனை முயற்சி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space