சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார்.
இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் 83,374 வாக்குகள் பெற்ற நிலையில், தவெகவின் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெரியகருப்பனைத் தோற்கடித்தார்.
இதைத் தொடர்ந்து, சீனிவாச சேதுபதியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரிய கருப்பன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ‘சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு உரிய தபால் வாக்கை, வேலூர் அடுத்த திருப்பத்தூர் தொகுதிக்கு மாற்றி அனுப்பியதால்தான் நான் தோல்வி அடைந்தேன். எனவே, அந்த தபால் வாக்கை சரிபார்க்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.தனக்கு எதிரான இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திருப்பத்தூர் எம்எல்ஏ சீனிவாச சேதுபதி மனு தாக்கல் செய்தார். அதில், ‘அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிரத்யேக எண் வழங்கப்பட்டு, அதன் மூலமாகவே அத்தொகுதி அடையாளம் காணப்படுகிறது.
தபால் வாக்குகளும் தொகுதி எண், மாவட்டங்களின் அடிப்படையில்தான் பிரி்க்கப்படுகிறதே தவிர, ஊர் பெயரை வைத்து பிரிப்பதில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.
இதை நிராகரிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சீனிவாச சேதுபதியின் மனுவை ஏற்று, பெரிய கருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.