சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஜெம்’ வீரமணி மீது புதிய போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘ஜெம் கிரானைட்’ உரிமையாளர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும், வீரமணியின் மற்றொரு உதவியாளர் கணேசனும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கின் பின்னணியில் பணம் பறிக்கும் கும்பல், போலீஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களின் தலையீடு உள்பட பல்வேறு தொடர்புகள் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
இதில், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி உள்பட 4 பெண் போலீஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் மேலும் 6 பெண் டிஎஸ்பி-க்கள் நியமிக்கப்பட்டனர்.வீரமணியிடம் ஏற்கெனவே போலீஸ் காவலில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அடுத்தகட்ட விசாரணையை தொடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலருக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில், ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தற்போது ‘ஜெம்’ வீரமணி மீது வழக்கு பாய்ந்துள்ளது.
அதாவது, கடந்த 2004-ம் ஆண்டு சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்திருந்தார்.
அந்த வழக்கில், கல்வி உதவிகள் வழங்கி தனது மகளை வீட்டுக்கு வரவழைத்து வீரமணி பாலியல் தொல்லை கொடுத்ததால், தனது மகள் வீட்டுக்கு வந்தவுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அந்தச் சிறுமியின் பெற்றோர் 2004-ம் ஆண்டு ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்போது சந்தேக மரணம் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2017-ல் நடந்த ஜல்லிக்கட்டு கலவரத்தில் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் எரிந்ததில் அந்த வழக்கு ஆவணங்கள் எரிந்து விட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதனால் அந்த வழக்கு கிடப்பிலேயே போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜெம் வீரமணியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என போலீஸார் தெரிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சிறுமியின் தாய், நேற்று சிறப்பு புலனாய்வு குழுவிடம் நேரில் புகார் தெரிவித்தார்.
அதில், ‘தன் மகளை பாலியல் தொல்லை செய்து அவர் இறப்புக்கு காரணமான வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து வீரமணி மீது புதிதாக மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ‘ஜெம்’ வீரமணிக்கு எதிராக 15 சிறுமிகள், பெண்கள் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மீதம் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ‘ஜெம்’ வீரமணி வழக்குகள் தொடர்பாக புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் இவ்வழக்குக்கு தொடர்புடைய தகவல்கள், உண்மைகள், ஆவணங்கள் அல்லது பிற முக்கிய விபரங்கள் ஏதேனும் தெரிந்திருப்பின், அவற்றை 9345319676 என்ற செல்போன் எண்ணில் நேரடியாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாகவைக்கப்படும்.
மேலும், அதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. இதனால், இந்த வழக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது.