தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமைக் கிழமை இடம்பெற்றது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்பாக தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் உப தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உணர்வு பூர்வமாக அஞ்சலித்தனர். அஞ்சலி நிகழ்வுகளுக்கு பல்வேறுபட்ட தடைகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் பிரதேச சபையின் முன்பாக தியாக தீபத்தின் உண்ணா நோன்பு நாட்கள் தோறும் தொடர்ச்சியாக தியாக தீபம் திலீபனின் மிகப் பெரிய திருவுருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டு சபை வளாகத்தின் முன்பாக சிவப்பு மஞ்சள் கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது. அத்துடன் தியாக தீபம் திலிபனின் அஞ்சலி ஊர்தியும் சபையினை வந்தடைந்த நிலையில் சபையில் தரித்து வைக்கப்பட்டு அஞ்சலிகள் இடம்பெற்றன.
அஞ்சலி நிகழ்வில் கருத்துரைத்த தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியாக தீபம் திலீபன் அவர்களது தியாகம் அளப்பரியது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தாயகம் மலரட்டும் என்ற இலட்சியத்தினை முன்வைத்து செயற்பட்டு இன்று விடுதலை வேண்டி நிற்கும் இனங்களின் கடவுளாகவே திலீபன் அவர்கள் மதிக்கப்படுகின்றார்.
தமிழ் மக்கள் இன்றும் இன ரீதியிலான ஒடுக்கு முறைகளில் இருந்து விடுதலை பெறவில்லை. எமது அரசியல் அபிலாசைகள் வென்றெடுக்கப்படவில்லை. எனவே தியாக தீபம் திலீபன் அவர்கள் இன்றும் பசியோடு தான் இருக்கின்றார். என்றோ ஒருநாள் நாங்கள் விடுதலை அடைவோம் என்ற உன்னத இலட்சிய பயணத்தினை அவர் எமது இனத்திற்குக் காட்டிச் சென்றிருக்கின்றார். எமது போராட்டம் ஆயத வழிக்கு அப்பால் அகிம்சை வழியில் அதிக அர்ப்பணிப்புடையது என்ற நியாயத்தினை உணர்த்திச் சென்றுள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அகிம்சையின் அடையாளமாக தியாகத்தின் உச்சமாக பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் கூட இன்றி உண்ணாநோன்பிருந்து தன்னுயிரை ஆகுதியாக்கிய எம் இனத்தின் தியாக தீபத்திற்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அஞ்சலிக்கின்றது என தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அஞ்சலி நிகழ்வில் தெரிவித்தார்.