மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களால் நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் திருமண மண்டபம், பாடசாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீது குண்டுவீசப்பட்டதில் மாணவர்கள், இளம் துறவிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மற்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (28) பிற்பகல் தெற்கு ஷான் மாநிலத்தின் மோ பை கிராமத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றின் மீது இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 35 பேர் படுகாயமடைந்துள்ளதாக மீட்புக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக வியாழக்கிழமை (26) மத்திய மியன்மாரின் மக்வே பிராந்தியத்தில் உள்ள இன் யோன் கிராமப் பாடசாலை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் மாணவர்கள், இளம் துறவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட குறைந்தது 20 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நாடு கடந்த தேசிய ஐக்கிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் மேற்கு ராகைன் மாநிலத்தின் மிரௌக்-யூ நகரிலுள்ள குடியிருப்புப் பகுதி மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்தப் பகுதி இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடும் பலம்வாய்ந்த அரக்கான் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும்.
2021 இராணுவப் புரட்சிக்குப் பின்னர் மியன்மாரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலை புரிந்ததாகச் சர்வதேச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி ஒரு வாரத்திற்குள்ளேயே இக்கொடூர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.