கிளிநொச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் பி. பிரதீபனால் இந்தியாவில் அச்சடிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட இரு தமிழ் நூல்களை இலங்கை சுங்கத் திணைக்களத்தினர் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது அவரின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தியாவின் சென்னையில் அச்சிடப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட 288 நூல்கள் அடங்கிய தொகுதி, "தேசிய நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்" எனக் கூறி இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
இத்தொகுதியில் 'இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்தான்', 'எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்', 'பயங்கரவாதி' மற்றும் 'சைனைட்' ஆகிய நான்கு தலைப்பிலான புத்தகங்கள் அடங்கியிருந்தன.
இவற்றுள் 'பயங்கரவாதி' மற்றும் 'சைனைட்' ஆகிய நூல்கள் புனைகதைகள் என இலங்கை கலைக் குழுவினால் சான்றளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட போதிலும், 'இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்தான்' நூலின் 75 பிரதிகளையும் 'எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்' நூலின் 147 பிரதிகளையும் சுங்கத் திணைக்களத்தினர் தொடர்ந்து தடுத்து வைத்திருந்தனர்.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய தலைமையிலான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணையின் போது, சுங்கத் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் அதிகார வரம்புகள் இன்றி பொறுப்புகளை ஒன்றன் மீது ஒன்று சாட்டி வந்தமை தெரியவந்தது.
அரச நிறுவனங்களுக்குள் தமிழ் மொழிப் புலமை இன்மையும், புத்தக அட்டையில் சித்தரிக்கப்பட்டிருந்த பிரிக்கப்பட்ட இலங்கை வரைபடம் குறித்த பயமுமே இந்த முதற்கட்டக் கைப்பற்றலுக்கு முக்கிய காரணம் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியலமைப்பின் 14(1)(a) உறுப்புரையின் கீழ் கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளதை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், தண்டனைச் சட்டக்கோவையின் 120 ஆம் பிரிவின் கீழ் சட்டப்பூர்வமான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க பிரதிவாதிகள் தவறிவிட்டதாகவும், 2002 ஆம் ஆண்டிலேயே குற்றவியல் அவதூறு சட்டம் இலங்கையில் நீக்கப்பட்டுவிட்டதால், அரச அதிகாரிகளுக்கு எதிரான அவதூறுகளைக் காரணம் காட்டி புத்தகங்களைக் கைப்பற்ற சுங்கத் திணைக்களத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் எழுத்தாளரின் பேச்சுச் சுதந்திரம் மட்டுமன்றி, சமத்துவத்திற்கான உரிமை (உறுப்புரை 12(1)), மொழி அடிப்படையிலான பாகுபாடற்ற தன்மை (உறுப்புரை 12(2)) மற்றும் சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்கும் கலாசாரத்தைப் பேணுவதற்குமான உரிமை (உறுப்புரை 14(1)(f)) ஆகிய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு முடிவெடுத்துள்ளது.
இதற்கமைய, தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு புத்தகங்களின் அனைத்துப் பிரதிகளையும் உடனடியாக விடுவிக்குமாறும், இது தொடர்பான இணக்கப்பாட்டு அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறும் இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இவ்விசாரணையில் முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணிகளான நடராஜா காண்டீபன், கலாநிதி விராஞ்சன் ஹேரத் மற்றும் எச். தமிழவள் காண்டீபன் ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.