தென் கொரியாவின் புண்டாங் (Bundang) மாவட்டத்தில் நேற்று  புதன்கிழமை (11) காலை பஸ் ஒன்று பல வாகனங்கள் மீது மோதியதில் 57 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து சியோல் நகருக்குத் தெற்கே உள்ள சியோங்னம் நகரின் புண்டாங் பகுதியில் இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து சமிக்ஞை விளக்குக்காக காத்திருந்த வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதிய குறித்த பஸ் , பின்னர் வீதியின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி நின்றுள்ளது.

இந்தத் தொடர் விபத்தில் 4 பஸ்கள், ஒரு பாரவூர்தி மற்றும் 27 கார்கள் என மொத்தம் 32 வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி சேதமடைந்துள்ளன.

விபத்து நடந்த இடத்திற்கு 88 தீயணைப்புப் படை வீரர்களும் 33 மீட்பு வாகனங்களும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, அவசர மருத்துவ நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பஸ்ஸின் சாரதி மீட்கப்பட்டு, காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய, சேதமடைந்த பஸ்ஸின் 'பிளாக் பொக்ஸ்' (Black box) தரவுகள் மற்றும் அப்பகுதியிலுள்ள சிசிரிவி காணொளிகளைப் பயன்படுத்தி  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.