அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள புரூக்ளின் பகுதியில், நிர்மாணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த திறந்தவெளித் தளமொன்றின் மீது நேற்று புதன்கிழமை (11) மாலை மூன்று மாடிக் கட்டடமொன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதுடன், 17-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் திடீர் விபத்தில் சுமார் 250 தீயணைப்பு வீரர்கள், மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடியவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புரூக்ளினின் பிளாட்புஷ் அவென்யூவில் அமைந்துள்ள 1930-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டடத்தின் ஒரு பகுதி முற்றாக இடிந்து விழுந்துள்ளதால், உள்ளே இருந்த படுக்கையறைகள் மற்றும் அலுமாரிகள் வெளியே தெரியும் வகையில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இடிபாடுகளில் இருந்து கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்படப் பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.