தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு இறுதிநாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் தயகப் பரப்பிலும், புலம்பெர் தேசங்களிலும் இன்று சனிக்கிழமை (26) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் முல்லைத்தீவு - விசுவமடு, தேரவில் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து, திலீபன் அவர்களின் உருவப்படம் தாங்கிய நினைவு ஊர்தி ஒன்று, யாழ்ப்பாணம் - நல்லூரில் அமைந்துள்ள திலீபன் அவர்களின் நினைவிட வளாகம் நோக்கிப் புறப்பட்டுள்ளது.

குறிப்பாக தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக்குழுவின் செயலாளர் சுந்தரலிங்கம் யோகலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட, இந்த திலீபன் அவர்களது உருவப்படம் தாங்கிய நினைவு ஊர்தி பவனியானது அஞ்சலிகளுடன் ஆரம்பமானது.

அந்தவகையில் தியாகதீபம் திலீபன் அவர்களின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து திலீபன் அவர்களது உருவப்படம் தாங்கிய நினைவு ஊர்தி யாழ்ப்பாணம் நல்லூரை நோக்கிப் புறப்பட்டது.

மேலும் குறித்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் வேலாயுதம் கரிகாலன், முன்னாள் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் சண்முகசராசா ஜீவராசா, தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக்குழுவினர், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.