எதிரணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை அடையாளம் காண்பதற்கு முன்னதாக குறைந்த பட்ச பொதுவேலைத் திட்டமே தற்போதைய தேவையாக உள்ளதென பேராசிரியர் ஜி.எல்.பீரஸ் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணியின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் மற்றும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த தேர்தல்களுக்கான வேட்பாளர்களைப் பற்றி பேசுவதற்கும், வேட்பாளர்களை அடையாளம் காண முயல்வதற்குமான நேரம் இதுவல்ல. வேட்பாளர்களை அடையாளம் காண்பதற்கு இது முந்தைய நேரமாகும். இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியது அதுவல்ல. பல்வேறு அடையாளங்களைக் கொண்ட கட்சிகளும் குழுக்களும் தங்களின் தனித்துவமான அடையாளங்களைத் தக்க வைத்துக் கொண்டு, ஒரு பொதுவான திட்டத்தின் கீழ் இணைந்து செயற்பட உடன்படக்கூடிய பரந்த தளத்தைக் கட்டமைப்பதே தேவைப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் சிதறுண்டும் பிளவுபட்டும் கிடந்தால், அது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துவிடும். இந்நாட்டின் ஜனநாயகத்தின் தொடர்ச்சிக்கு ஆபத்தாக இருக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதே முக்கிய நோக்கமாகும்.
பல்வேறு விடயங்களில் நமக்கு இடையே அணுகுமுறை வேறுபாடுகள் இருந்தாலும்,எந்தெந்த விடயங்களில் இணைந்து செயற்படுவது என்பதை முடிவு செய்ய முடியும்.
இதை 'குறைந்தபட்ச பொதுவேலைத் திட்டம்' என்று அழைக்கலாம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை அடையாளம் கண்டு, அந்த இலக்குகளை நோக்கிச் செயற்பட எமது கூட்டு வலிமையைப் பயன்படுத்துவது முக்கியமானதாகும் என்றார்.