பேராதனை, முருத்தலாவ பகுதியிலிருந்து கெஸ்பேவ பிரதேசத்திலுள்ள நண்பரைச் சந்திப்பதற்காகச் சென்று காணாமல் போயிருந்த 30 வயதுடைய நபர், கொலை செய்யப்பட்டுக் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
கருவலவத்த, முருத்தலாவ பகுதியில் வசிக்கும் தனது கணவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவியால் கடந்த 24 ஆம் திகதி பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
தனது கணவர் கெஸ்பேவ பிரதேசத்திலுள்ள நண்பரொருவரைச் சந்திக்கச் செல்வதாக இறுதியாகக் கூறியிருந்ததாக முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து, பேராதனை பொலிஸாரால் கெஸ்பேவ பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கெஸ்பேவ பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த நபர் கடந்த 23ஆம் திகதி காலை கெஸ்பேவ பிரதேசத்தில் தனது நண்பரைச் சந்தித்துள்ளதாகவும், இதன்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, நண்பரும் மேலும் சிலரும் இணைந்து அவரைப் பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் வைத்துக் கொலை செய்து, காட்டுப் பகுதியொன்றில் புதைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை அடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் நேற்று (28) சனிக்கிழமை கெஸ்பேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மடபாத மற்றும் பொல்கஸ்ஓவிட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20, 36 மற்றும் 37 வயதுடையவர்களாவர்.
கொலை செய்யப்பட்டவரின் சடலம் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் கெஸ்பேவ நீதவானினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) ஸ்தலப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.