நியூசிலாந்தின் வடக்குத் தீவில் அமைந்துள்ள வைராபரா பிராந்திய கடற்கரையில், 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கிலங்கள் திடீரென கரை ஒதுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளன. 

புதன்கிழமை (4) நள்ளிரவு நேரத்தில், அங்குள்ள ங்காயி (Ngawi) கடற்கரைப் பகுதிக்குக் கூட்டமாக சென்ற இந்தத் திமிங்கிலங்கள், கரையில் இருந்த கூர்மையான பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டன.

வியாழக்கிழமை (5) அதிகாலை அப்பகுதிக்குச் சென்ற உள்ளூர் மக்கள், திமிங்கிலங்கள் பாறைகளுக்கிடையே காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள், 'புராஜெக்ட் ஜோனா' மருத்துவக் குழுவினர் மற்றும் மாஓரி பழங்குடியின மக்கள் இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினும், பாறைகளில் மோதியதால் ஏற்பட்ட பலத்த காயங்கள் மற்றும் கடுமையான நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பெரும்பாலான திமிங்கிலங்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. 

எஞ்சியிருந்த சில திமிங்கிலங்களையும் காப்பாற்ற முயன்றபோதிலும், கடைசி கட்டத்தில் அவையும் உயிரிழந்தன.

உயிரிழந்த திமிங்கிலங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், மாஓரி பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய 'கராகியா' பிரார்த்தனைகளைச் செய்து, அதற்கான இறுதி மரியாதைகளை மேற்கொண்டனர். 

கடந்த 30 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் இதுவே மிகப் பெரிய திமிங்கிலங்கள் கரை ஒதுங்கும் சோக நிகழ்வு என்று கடல்சார் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.