2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல்லினை விரைவாக தம்மிடமிருந்து கொள்வனவு செய்வதற்குரிய ஏற்பாட்டைச் செய்து தருமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் ஒட்டுசுட்டான் பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டுசுட்டான் பிரதேச விவசாயிகளின் அழைப்பை ஏற்று, குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமையை பார்வையிட்ட ரவிகரன், விவசாயிகளின் குறைபாடுகளைக் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போதே ஒட்டுசுட்டான் பிரதேச விவசாயிகளால் ரவிகரனிடம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், வித்தியாபுரத்தில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபைக்குரிய நெற்களஞ்சியசாலையில், கடந்த மூன்று போகங்களின்போது விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெல் தேங்கிக் கிடப்பதாக இதன்போது விவசாயிகளால் ரவிகரனிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
அந்த நெற்களஞ்சியசாலையில் நெல் தேங்கிக் கிடப்பதால், 2026 சிறுபோகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை சந்தைப்படுத்துவதில் தாம் பலத்த இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் இதன்போது விவசாயிகளால் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
தற்போது சிறுபோகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை, கொள்வனவு செய்யவேண்டுமெனில், வவுனியா வடக்கு பிரதேசத்தின் கனகராயன் குளத்தில் உள்ள தமது களஞ்சியசாலைக்கு எடுத்துவருமாறு நெல்சந்தைப்படுத்தல் சபையால் தெரிவிக்கப்படுவதாக இதன்போது விவசாயிகளால் ரவிகரனிடம் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு கனகராயன்குளத்துக்கு நெல்லை எடுத்துச் செல்வதானால் தமக்கு பாரிய செலவுகள் ஏற்படும் என விவசாயிகள் இதன்போது ரவிகரனிடம் சுட்டிக்காட்டினர்.
எனவே ஒட்டுசுட்டான், வித்தியாபுரம் பகுதியில் அமைந்துள்ள நெற்களஞ்சியசாலையில் தேங்கிக் கிடக்கின்ற நெல்லினை விரைவாக உரிய முறையில் அகற்றி, தம்மிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு விவசாயிகள் ரவிகரனிடம் கோரினர்.
நெற்கொள்வனவை துரிதப்படுத்த நடவடிக்கை எடுங்கள்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space