இலங்கையில் பல தலைமுறைகளாக நெல் விவசாயம் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும், நெல் விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த விவசாயிகள் பொருளாதார ரீதியாகப் பலமடையவோ வெற்றி பெறவோ இல்லை. மாறாக நெல் ஆலை உரிமையாளர்களே பயனடைந்துள்ளனர். விவசாயத்தை வெறும் உணவு உற்பத்தியாகப் பார்க்காமல் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், ஏற்றுமதி வருவாயை ஈட்டவும் வாணிக விவசாயத்தை நோக்கி மாறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று விவசாய அமைச்சர் லால் காந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் உயர் விளைச்சல் நெற்செய்கைக்கான தேசிய மாதிரித் திட்டத்தின் (சுப்ரி வி யாய) ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இனிமேலும் புதிய நெல் நிலங்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படாது. தற்போதுள்ள நெல் நிலங்களில் ஹெக்டேருக்கு 10 மெட்ரிக் டொன் வருவாய் பெறும் இலக்கை அடைவதோடு, நெல் வயல்களின் ஒரு பகுதியை குரக்கன், சோளம், தென்னை, கறுவா, வாழை, மாம்பழம், அன்னாசி மற்றும் பலா போன்ற மாற்று பயிர்களை பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக, ஒரு ஏக்கர் வயல் நிலத்தில் எட்டில் ஒரு பகுதியில் குரக்கன் பயிர்ச்செய்கையை தொடங்கும் விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்குவிப்புத் தொகைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், நாட்டின் விவசாய உற்பத்திகளை உலகளாவிய சந்தைக்குக் கொண்டு செல்லும் நோக்கிலான வணிக விவசாய அபிவிருத்தி திட்டத்தின் (CAD) மூலம், மாம்பழம், அன்னாசி, பலா மற்றும் வாழை போன்ற பயிர்களை நேரடியாக ஏற்றுமதியாளர்களுடன் இணைத்து, சந்தைப்படுத்தல் மற்றும் அறுவடை வீணாதல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் நெல்லுக்கான உள்நாட்டு தேவை மற்றும் விலை ஏற்ற இறக்கங்கள் நிலவும் சூழலில், விவசாயத்தை வெறும் உணவு உற்பத்தியாகப் பார்க்காமல் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், ஏற்றுமதி வருவாயை ஈட்டவும் வாணிக விவசாயத்தை நோக்கி மாறுவதைத் தவிர வேறு வழியில்லை. அதுவே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
நாட்டின் ஊட்டச்சத்து நிலை குறித்து மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ள கருத்துகளை மேற்கோள் காட்டிய அமைச்சர், இலங்கையர்களின் உணவுப் பழக்கத்தில் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாகவும், புரதச்சத்து குறைவாகவும் காணப்படுவதாகக் தெரிவித்தார். இதனால் அரிசி நுகர்வைக் குறைத்து, புரதச்சத்துமிக்க உணவுகளை அதிகரிக்கும் வகையில் விவசாய உற்பத்திகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
அத்துடன், தொடர்ச்சியான இரசாயனப் பயன்பாட்டினால் நாட்டின் மண் வளம் அழிந்துபோயுள்ளது. மண்ணிற்கு மீண்டும் உயிரூட்டும் கரிமப் பயன்பாட்டு முறைகள் அவசியமானவை. ஆய்வகங்களுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் விவசாயத் தொழில்நுட்பங்களை விவசாய நிலங்களுக்கு விரைவாகக் கொண்டுசெல்ல வேண்டும். கரிமப் பிரிவு நிபுணர்கள் தங்கள் தொழில்நுட்பங்களை நிலத்தில் நிரூபித்துக் காட்ட களப்பணிகள் விரைவுபடுத்தப்படும்.
விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் 30 திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகள், பொறுப்பேற்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில் இருந்த அதிகாரிகளைக் கொண்டு பணிகளைச் சரியாக முன்னெடுக்க முடியாமல் போன போதிலும், தற்போது திறம்படச் செயல்படக்கூடிய ஒரு நிர்வாக இயந்திரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. 30 நிறுவனங்களின் தலைவர்களுடனும் எவ்வித நிகழ்ச்சிநிரலும் இன்றி திறந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டு, விவசாயத் துறையின் எதிர்கால மறுமலர்ச்சிக்கான புதிய வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்றார்.