பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாகத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அதற்குப் பதிலாக அதைவிடவும் ஆபத்தான ஏற்பாடுகளைக் கொண்ட இரண்டு சட்டமூலங்களை முன்வைத்துள்ளது. மக்களின் எதிர்ப்பும் போராட்டங்களுமே அரசாங்கத்தைத் தற்காலிகமாகப் பின்வாங்கச் செய்துள்ளன என மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் லஹிரு வீரசேகர தெரிவித்தார்.

மக்கள் போராட்ட இயக்கத்தின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தையும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தையும் உரிய சமூகக் கலந்துரையாடல்களின்றிப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்த அரசாங்கம், அதற்குப் பதிலாகப் புதிய சட்டமூலங்களைக் கொண்டுவர முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தச் சட்டமூலங்களுக்கு மாற்றாகப் புதிய சட்டங்கள் அவசியமில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவும் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன. 

புதிய சட்டமூலங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள பரந்த வரைவிலக்கணங்களின்படி, ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகள், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், செய்திகளை வெளியிடுதல், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் வழங்குதல் போன்ற செயற்பாடுகள்கூட பயங்கரவாதக் குற்றங்களாகக் கருதப்படக்கூடிய ஆபத்து உள்ளது. அதேபோன்று, மூவர் இணைந்து அரச அதிகாரி ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்தால்கூட அது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாகக் கருதப்படலாம்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பிறப்பிக்கக்கூடிய அதிகாரம் வழங்கப்படுவது நீதித்துறையின் தலையீட்டைக் குறைக்கிறது. பொலிஸார் ஒருவரை 72 மணித்தியாலங்கள் வரை தடுத்து வைப்பதற்கும், பொலிஸ் வாக்குமூலங்களைச் சாட்சியங்களாகப் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும் ஏற்பாடுகள் மக்களின் அடிப்படை உரிமைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டங்களைக் கொண்டே குற்றச் செயல்களைக் கையாள முடியும். பயங்கரவாதத் தடைச் சட்டமும் பொதுச் சொத்துகள் தொடர்பான சட்டமும் கடந்த காலங்களில் அரசியல் பழிவாங்கல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை உரிய நீதி நிலைநாட்டப்படவில்லை.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சில திருத்தங்களை முன்மொழிந்திருந்தாலும், சட்டமூலங்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கவில்லை. பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவும் வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது இந்தச் சட்டமூலங்கள் மீண்டும் கொண்டுவரப்படலாம் எனக் கூறியுள்ளார்.

பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் தீர்மானகரமான எதிர்ப்பை வெளிப்படுத்தத் தவறியுள்ளன. தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஊடகங்களின் எதிர்ப்பே அரசாங்கத்தைப் பின்வாங்கச் செய்துள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர்களான சுனில் வட்டகல, எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கடந்த காலங்களில் இத்தகைய சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றங்களை நாடியவர்களாவர்.

எனவே, இரண்டு சட்டமூலங்களையும் அரசாங்கம் முழுமையாக மீளப்பெற வேண்டும். அதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் இரத்துச் செய்ய வேண்டும். அந்தச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள், காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். தற்போதைய பின்வாங்கல் தற்காலிகமானதே தவிர, இறுதி வெற்றியல்ல என்றார்.