பருத்தித்துறைப் பிரதேசத்தின் முக்கிய கடற்றொழில் கேந்திர நிலையமாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிக நடமாட்டம் காணப்படும் சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் பருத்தித்துறை இறங்குதுறையில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

குறிப்பாக, ஆழ்கடலை ஒட்டிய பகுதியில் மக்கள் நடமாடும் இறங்குதுறையின் மேற்பரப்பிலேயே இந்தப் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு வருகை தரும் மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

மீனவர்களின் அன்றாட கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு இவ்விறங்குதுறை மிக முக்கியமானதாக விளங்குவதுடன், பருத்தித்துறையின் சுற்றுலாத்துறை அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றது.

இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் ஏற்பட்டுள்ள விரிசலை உரிய நேரத்தில் கவனிக்க தவறினால், எதிர்காலத்தில் பாரிய விபத்துக்கள் ஏற்படுவதற்கான அபாயமும் காணப்படுகின்றது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் அலட்சியம் காட்டாது உடனடியாக நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்து, தொழில்நுட்ப மதிப்பீட்டை மேற்கொண்டு, விரிசலைச் சீரமைப்பதற்கான அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.