அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதி இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 21 வயதுடைய மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மல்வத்தைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் உடனடியாக அம்பாறை மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 23 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த 21 வயதுடைய மற்றைய இளைஞர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மோட்டார் சைக்கிளின் கவனயீனமான மற்றும் தவறான சாரத்தியத்தினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.