வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்கள் உயிர்மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக கட்டடத்தின் மேல் தள பல்கனிகள், படிக்கட்டுகள் மற்றும் நடைபாதைகளில் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 

கார்னெல் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள பள்ளத்தாக்குகளுக்கு மேலே உள்ள 8 பாலங்களில் நிரந்தரத் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நியூயோர்க் பல்கலைக்கழக கட்டடத்தின் பல்கனிகளில் பாதுகாப்புத் தடுப்புகளும் பல்கலைக்கழக விடுதி ஜன்னல்கள் சிலவற்றை மாணவர்கள் இலகுவில் திறக்க முடியாதவாறு பூட்டுகள் இடப்பட்டுள்ளன.

மேலும், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் புரூனல் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விடுதிகளின் ஜன்னல்கள் சிலவற்றை குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே திறக்கக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வாட்ஹாம் கல்லூரியில் ஜன்னல்களின் அமைப்புகளை மாற்றக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கட்டடத்தின் கூரைகள், உயரமான பகுதிகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று பல்கனிகளிலும் பாதுகாப்பு கருதி கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தியாவிலும் சில கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் உயிர்மாய்த்துக்கொள்வதற்கு வாய்ப்பாக காணப்படும் கட்டட அமைப்புகளில் மாற்றங்களைச் செய்து வருகின்றன. அதன்படி, மாணவர்களின் விடுதி அறைகளில் மேற்கூரையுடன் பொருத்தப்பட்டுள்ள மின்விசிறிகளுக்குப் பதிலாக பக்கசுவர்களில் மின்விசிறிகள் பொருத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.