ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகளை முழுமையாக நிறைவு செய்வதற்கு மேல் நீதிமன்றம்  நேற்று (19) உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னர் முறைப்பாட்டாளர்  தரப்பு  சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து,  பிரதிவாதி தரப்பு  சாட்சிகளை அழைப்பதற்காக  பிரதிவாதி தரப்பினருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, தலைமை நீதிபதி நயனா செனவிரத்ன மற்றும் நீதிபதிகளான லக்மாலி ஹேவாவசம், நளின் ஹேவாவசம் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில்  நேற்றைய தினம்  இந்த வழக்கு பிரதிவாதி தரப்புகு சாட்சிகளுக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதிகள் சார்பில் இரண்டு பெண் சாட்சிகளும் ஒரு ஆண் சாட்சியாளரும் மன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, வழக்கின் அனைத்துச் சாட்சி நெறிப்படுத்தல்களையும் சாட்சி விசாரணைகளையும் நிறைவு செய்த நீதிபதிகள் குழாம், வழக்கு தொடர்பான இறுதிச் சமர்ப்பணங்களை  முன்வைப்பதற்காக இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டு, பின்னர் அது ஒரு வார காலத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டது.

அதற்கமைய, பிரகீத் எக்னெலிகொட வழக்கு தொடர்பான இறுதிச் சமர்ப்பணங்களுக்காக எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.