சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள், விதைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (19) கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலீட்டுச் சபை சமிக்ஞை விளக்குச் சந்திக்கு அருகில், நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இக்கைது இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொருட்களைக் காரொன்றில் கடத்திச் சென்ற சந்தேகநபர், காருடன் கைது செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக விமான நிலையப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் பெரியமுல்ல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவராவார்.
சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையப் பொலிஸாரினால் கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.