பிரான்சில் கோவிட் தொற்று அதிகரித்துவரும் நிலையில், முன்கூட்டியே தடுப்பூசி வழங்க மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
பிரான்சில் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
முந்தைய வாரங்களில் 100,000 பேரில் ஒன்பது பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
அதன் பொருள் என்னவென்றால், புதிதாக 8,806 பேர் கோவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதாகும்.
பிரான்ஸ் அரசு, இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 13ஆம் திகதி, கோவிட் மற்றும் ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டத்தைத் துவக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்துவருவதால், முன்கூட்டியே கோவிட் தடுப்பூசி வழங்குமாறு மருத்துவ அமைப்புகளும் மருத்துவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆனால், மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள அரசு மறுத்துவிட்டது.
சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகம், முன்கூட்டியே கோவிட் தடுப்பூசி வழங்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது என்பதை அறிகுறிகள் எதுவும் காட்டவில்லை என்று கூறி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டது.