உயிரிழந்த காவந்திஸ்ஸ யானையின் சந்தைப் பெறுமதி தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை அரச மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாக இம்மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, கல்கமுவ வனஜீவராசிகள் அலுவலகத்தின் வனஜீவராசிகள் வலயப் பாதுகாவலரும் சட்டத்தரணியுமான சதுர குணரத்னவிற்கு மஹவ நீதிவான் அனுருத்திகா செனவிரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், காவந்திஸ்ஸ யானையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் இம்மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பி.பி.எம்.ஏ. விஜேசுந்தரவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்படி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்போது மன்றில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி விஜித விக்கிரமநாயக்க விடயங்களை முன்வைக்கையில், “மின்சார தாக்கதளுக்குள்ளாகி தீகதந்து-1 என்ற யானை கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கெக்கிராவை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிற்கு அமைய, அந்த யானையின் சந்தைப் பெறுமதி 90 மில்லியன் ரூபா என அரச மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மதிப்பிடப்பட்டுள்ளது”.
“மேலும், தீகதந்து-1 தந்தம் கொண்ட யானை கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான காப்புறுதி நிறுவன முகாமையாளருக்கு எதிராகப் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாக பத்திரிகைச் செய்திகளை மேற்கோள்காட்டி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, காவந்திஸ்ஸ தந்தம் கொண்ட யானை மருந்து நஞ்சானதாலேயே உயிரிழந்ததாகச் சமூகத்தில் ஒரு கருத்து நிலவுவதாகவும், கால்நடை வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் இருந்தபோதே காவன்திஸ்ஸ உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆகையால் அது குறித்து நீதிமன்றத்தின் கவனத்தைச் செலுத்துமாறும்” கோரிக்கை விடுத்தார்.
மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிவான், இம்மாதம் 25 ஆம் திகதி காவந்திஸ்ஸ யானையின் சந்தைப் பெறுமதி தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை மற்றும் யானையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவனங்களை அரச மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பி.பி.எம்.ஏ. விஜேசுந்தர ஆகியோர் மன்றில் சமர்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இதேவேளை, காவந்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாகத் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.