நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருப்பது சரியான திட்டமிடல் அல்ல. மாறாக, அரச ஊழியர்களை வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு ஏவியிருக்கலாம். அதேநேரம் அரசாங்கம் தற்போதுள்ள நிலையில் விவசாயிகளுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கி அவர்களை தைரியப்படுத்தவேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை எமது நாட்டுக்கும் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக எரிபொருட்களின் விலை அதிகரிப்பானது, நாட்டின் அனைத்து துறைகளையும் பாதிக்கிறது. அதனால் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு மிகவும் சிந்தித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேநேரம் நாடு எதிர்கொண்டு இந்த அசாதாரண சூழ்நிலையில், அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட எதிர்க்கட்சிகள் யாரும் செயற்படவில்லை. அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை பாதிக்கும் வகையிலும் எதிர்க்கட்சிகள் செயற்படவில்லை. மாறாக அரசாங்கம் ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது. அதில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றிருந்தால், அதனை நாங்கள் அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டுகிறோம். இது எந்த வகையிலும் அரசாங்கத்துக்கு பாதிப்பு இல்லை.
குறிப்பாக அரசாங்ககம் 1775 டபல் கெப் வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த நேரத்தில் வாகனங்களை இறக்குமதி செய்யவேண்டாம் என நாங்கள் தெரிவிக்கவில்லை. மாறாக, அந்த 1775 வாகனங்களும் மின்சார வாகனங்களாக இறக்குமதி செய்யுமாறே நாங்கள் தெரிவிக்கிறோம்.
அரசாங்கம் அவ்வாறு மின்சார வாகனம் இறக்குமதி செய்யுமானால், தற்போதைய எரிபொருள் விலைக்கு நாள் ஒன்றுக்கு 8 பில்லியன் ரூபாவை அரசாங்கத்துக்கு மிதப்படுத்திக்கொள்ள முடியும்.
அத்துடன் கடந்த காலங்களில் இவ்வாறான நெருக்கடி நிலைமைகள் வந்தபோது, தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு, அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாதளவுக்கு தடைகளை ஏற்படுத்தி வந்தது. வீதியில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டு வந்திருந்தது. அவ்வாறான அரசியலை தற்போதுள்ள எதிர்க்கட்சி மேற்கொள்ளவில்லை. மாறாக, அரசாங்கத்தின் திட்டங்களுக்கு முடியுமான வகையில் ஒத்துழைப்பு வழங்குகிறது. இது எமது பலவீனம் அல்ல. ஏனெனில் நாட்டை ஆட்சி செய்தவர்கள் என்பதால், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் எதிர்கட்சி அல்ல.
மேலும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் அனைத்து துறைகளின் கட்டணங்களும் அதிகரிக்கிறது. இதனை அரசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிபொருள் செலவை கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் புதன்கிழமை அரச விடுமுறையாக அறிவிப்பு செய்திருப்பது சரியான திட்டமிடல் அல்ல. மாறாக அரச ஊழியர்களை வீடுகளில் இருந்து பணியாற்ற ஏவி இருக்கலாம். இதனால் நாள் ஒன்றுக்கான பணிகள் முடங்குகின்றன. கொவிட் காலத்திலும் நாடு செயற்பட்டு வந்தது.
அதேநேரம் தற்போதுள்ள எரிபொருள் விலை ஏற்றத்தால் ஏற்படும் விலை அதிகரிப்புகளை கட்டுப்படுத்த, அரசாங்கம் குறிப்பிட்ட பிரிவினருக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும். நூற்றுக்கு 30 வீத அரச ஊழியர்களுக்கு எரிபொருள் இலவசமாகவே வழங்கப்படுகிறது. அதனை நிறுத்த வேண்டும். ஏனைய 75 வீதத்தில் 25 வீதமானவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக விவவாயிகள், கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் நிவாரண வழங்கி அவர்களை கைரியப்படுத்த வேண்டும்.
ஏனெனில் தற்போது நாட்டுக்குள் ஒரு லீட்டர் பெற்றோல் 265 ரூபாவுக்கும் ஒரு லீட்டர் டீசல் 290 ரூபாவுக்குமே இறக்கப்படுகிறது. அதில் பெற்றோல் ஒரு லீட்டருக்கு 175 ரூபாவு டீசல் ஒரு லீட்டருக்கு 111 ரூபாவும் வரி அறவிடப்படுகிறது. இது அரசாங்கத்துக்கு கிடைக்கும் லாபமாகும். தற்போதுள்ள நெருக்கடி நிலையில் அரசாங்கம் இந்த லாபத்தில் ஒரு தொகையை குறைத்துக்கொண்டு அதில் இந்த பிரிவினருக்கு நிவாரணம் வழங்க முடியும். அதனால் அரசாங்கத்துக்கு எந்த நட்டமும் ஏற்படப்போவதில்லை என்றார்.
புதன்கிழமை விடுமுறை சரியான திட்டமிடல் அல்ல!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space