யாழ். மாவட்டத்தில் புதிதாக மதுபாணச்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமையை எதிர்த்தும் முன்னைய ஆட்சிக்காலங்களில் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிகளை உண்மை விசாரணை வாயிலாக கட்டுப்படுத்தமாறு கோரி புத்தூரில் வியாழக்கிழமை (16) காலை பெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மற்றும் மது போதைக்கு எதிரான இயக்கம், அரசியல் கட்சிகள், பொது அமைப்பக்கள் இணைந்து இப் போராட்டதிதினை முன்னெடுத்தன. இப் போராட்டத்தில் ஆர்ப்பாட்டங்காரர்கள் யாழ் மாவட்டத்தின் நீர்வேலி, தெல்லிப்பழை, கரவெட்டி, சங்கானை போன்ற பகுதிகளில் புதிதாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள மதுபான நிலையங்களுக்கு அனுமதியை வழங்கக் கூடாது என்பதுடன் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மதுபானச் சாலை உரிமங்களையும் விசாரணைக்குழு ஒன்றை அமைத்து அவை சட்டதிட்டங்களுக்கு அமைவாக வழங்கப்பட்டனவா என்பதை ஆராய்ந்து கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து கோசங்களை எழுப்பியதுடன் ஜனாதிபதிக்கான மகஜர் கையளிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தள்ளனர்.

மேலும் போராட்டக்காரர்கள், அரசாங்கம் தேர்தல் காலங்களில் உத்தரவாதமளித்ததனைப் போல் மதுச்சாலைகள் தொடர்பான உண்மை நிலவரங்களை வெளிப்படுத்தி மதுபானசாலைகளுக்குள் புதைந்து கிடக்கின்ற அரசியல் லஞ்சத்தினை வெளிக்கொண்டு வரவேண்டும்.

போருக்குப் பின்பாக மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாத நிலையில் பின்தங்கியுள்ள நிலையில் ஏற்கனவே இருந்து வருகின்ற மதுபானச்சாலைகளை உண்மை விசாரணை ஒன்றின் வாயிலாக மூடுவதற்கக்கோருகின்ற போது, புதிய மதுபானச்சாலைகள் உருவாக்கப்படுவது பலத்த ஏமாற்றத்தினைத் தருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இப் போராட்டத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ;, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபைத்தவைவரும் மது ஒழிப்பு இயக்கத்தின் தலைவருமான சுகிர்தன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள் கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு எதிராகக் கலந்து கொண்டதுடன் மதுச்சாலைகளை எதிர்த்து உரைகளையும் ஆற்றினர்.