சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் சிகை அலங்கார நிலையங்களில் கடுமையான சுகாதார விதிமுறைகளை அறிமுகப்படுத்தி, அவற்றை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் முன்வைத்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்ட தொடரில் 16 அமர்வில் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணை, சிகை அலங்கார நிலையங்களில் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், சுகாதார நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

சிகை அலங்கார நிலையங்களில் பயன்படுத்தப்படும் சீப்புகள், முடிவெட்டும் இயந்திரங்கள், மேலங்கிகள், கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்களைச் சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்

எனச் சுட்டிக்காட்டிய உறுப்பினர் றிஸ்விகான், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உரிய முறையில் சுத்தம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

குறிப்பாக, சிகை அலங்கார நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாகத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, இதுவரை தன்னால் சபையில் முன்வைக்கப்பட்ட 30 பிரேரணைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த உறுப்பினர் றிஸ்விகான், அவற்றில் ஒர் இரு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமைக்காகச் சபை நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்தார்.

குறிப்பாக, சம்மாந்துறை பிரதேச சபையின் பெயர்ப்பலகை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டமை, உடங்கா பிரதேசத்தில் மின்விளக்கு பொருத்தப்படுவதற்காக பண்டர் கேபிள் பொருத்தப்பட்டமை மற்றும் உடங்கா 1 மற்றும் 2 கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட அம்பாறை 14 வீதியில் அமைந்துள்ள S24 வாய்க்கால் துப்புரவு செய்யப்பட்டமை ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நடவடிக்கைகளை முன்னெடுத்த தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள ஏனைய பிரேரணைகள் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தி, அவற்றைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சித்தி நிலவ்பாவின் பிரேணைக்கு கருத்து தெரிவிக்கும் போது "சம்மாந்துறை வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கான அனுமதி அட்டை நடைமுறை தொடர்பில், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமை" குறித்து உறுப்பினர் கவலை வெளியிட்டார்.

ஒரு நோயாளியைப் பார்வையிடுவதற்கு இரண்டு அனுமதி அட்டைகளை வழங்குவது அல்லது ஒரு அனுமதி அட்டையின் மூலம் இருவர் பார்வையிட அனுமதிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானம், கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும், இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, குறித்த தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு சபையின் தவிசாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீண்டும் அவர் வலியுறுத்தினார்.