மேலும், அதே வகையைச் சேர்ந்த மூன்றாவது டெஸ்ட்ராயர் கப்பல் கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிட்டதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிம் ஜொங் உன், “சோ ஹ்யோன்” கப்பலின் உருவாக்கம் தனது இராணுவத்தின் செயல்பாட்டு பரப்பையும் முன்கூட்டிய தாக்குதல் திறனையும் (Pre-emptive Strike Capability) அதிகரிக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுவதாக கூறியுள்ளார்.
வடகொரிய அரச ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இந்த போர்க்கப்பல் பல்வேறு ஆயுத அமைப்புகளை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வான்வழி தாக்குதல்களுக்கு எதிரான ஆயுதங்கள், கடற்படை எதிர்ப்பு ஆயுதங்கள், அணு ஆயுதங்களை தாங்கக்கூடிய பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் போன்றவை இடம்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்கப்பலின் கடல் சோதனைகளை பார்வையிட்ட கிம் ஜொங் உன், இந்த கப்பல் அனைத்து செயல்பாட்டு தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு குறைந்தது இரண்டு புதிய போர்க்கப்பல்களை இதே அல்லது அதற்கு மேம்பட்ட வகையில் கட்ட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா பெரும்பாலும் பாலிஸ்டிக் ஏவுகணை மேம்பாட்டில் கவனம் செலுத்தி வந்தது. ஆனால் தற்போது கிம் ஜொங் உன் கடற்படை திறனை வலுப்படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானப் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாம்போ கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் மூன்றாவது டெஸ்ட்ராயர் கப்பல், வடகொரிய ஆளும் தொழிலாளர் கட்சியின் நிறுவல் தினமான அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் செய்திகள்
கடற்படை அணு ஆயுத விரிவாக்க முயற்சிகள் “நமது கடல் அதிகாரத்தை பாதுகாப்பதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என கிம் ஜொங் உன் கூறியுள்ளார்.
சில அரசியல் ஆய்வாளர்கள், வடகொரியா விரைவில் புதிய கடல் எல்லையை அறிவிக்கத் தயாராக இருக்கலாம் என்றும் அது தென்கொரிய கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதிகளுடன் மோதலை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
கொரிய போரின் பின்னர் அமெரிக்க தலைமையிலான ஐ.நா. கட்டுப்பாட்டின் கீழ் வரையப்பட்ட Northern Limit Line கடல் எல்லையை வடகொரியா ஏற்க மறுத்து வருகிறது. இந்த கடல் எல்லைப் பகுதி கடந்த ஆண்டுகளில் பல கடற்படை மோதல்களுக்கு காரணமாக இருந்துள்ளது.
இந்நிலையில், வடகொரியாவின் அணு ஆயுத களஞ்சியத்தை மேலும் விரிவுபடுத்தும் திட்டங்களை கிம் ஜொங் உன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்ற முன் நிபந்தனையை அமெரிக்கா நீக்க வேண்டும் எனவும் வடகொரியா வலியுறுத்தியுள்ளது.