அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராகி வரும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து தீவிர ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் பண்டார வரகாகொட தெரிவிக்கையில்,

முந்தைய அரசாங்கங்களின் காலத்திலும் இவ்வாறான சட்டங்களுக்கு எதிராக குரல்கொடுத்த தரப்பினர், தற்போது அவற்றை விட கடுமையான சட்டங்களை கொண்டுவருவது அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கான இடங்களைத் தடை செய்வதற்கு பரிந்துரைக்கும் அதிகாரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் வரை கீழ்மட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை தொழிற்சங்க உரிமைகளைப் பாரதூரமாக பாதிக்கும்.

இந்த புதிய சட்டமூலமானது தேசிய பாதுகாப்பைக் கூறுபோட்டுக்கொண்டு, மறைமுகமாக தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக அமைந்துள்ளது. இதில் பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம் மிகவும் பரந்ததாகவும் தெளிவற்றதாகவும் காணப்படுவதோடு, சுகாதார சேவைகள் பாதிப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்றவையும் அவற்றுள் உள்வாங்கப்பட்டுள்ளன.

மேலும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் எவரையும் நீதிமன்ற விசாரணைகள் இன்றி நீண்ட காலம் தடுப்புக்காவலில் வைப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதீத அதிகாரங்கள் ஜனநாயகத்திற்குக் குந்தகம் விளைவிப்பதாக உள்ளன. எனவே, இந்தச் சட்டமூலத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தி, ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து கொள்கை ரீதியான எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளோம். ஐ.நா மற்றும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு இது குறித்து தெளிவுபடுத்தவுள்ளோம் என்றார்.