போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதெனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சுமார் 35 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்து முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களை அடுத்து, இந்தக் குற்றவாளியுடன் தொடர்புடைய நபருக்கு எதிராக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

 மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களுக்கு அமைய, சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டியதாகச் சந்தேகிக்கப்படும் பணத்தைக் கொண்டு, மடபத்த  பகுதியில் 12 பேர்ச்சஸ் காணியில் நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடி வீடு ஒன்றை வாங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சொத்து சந்தேக நபரின் மனைவியின் மூத்த சகோதரரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, குறித்த சொத்து விற்பனை செய்யப்படுவதையும், கைமாற்றப்படுவதையும் அல்லது வேறு எந்தவிதமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதையும் தடுக்கும் வகையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த சொத்து மீதான முடக்க உத்தரவை  பிறப்பித்துள்ளனர்.

இதன்படி, நேற்று (09) முதல் 14 நாட்களுக்கு இந்த முடக்கம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.