மட்டக்களப்பில் 1.147 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த சந்தேக நபருக்கு (வயது 29) 7  வருட கடூழிய சிறைத் தண்டனையும்  ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும்  செலுத்துமாறும்  அபராதத்தை செலுத்த  தவறினால் 2 வருட சிறைத் தண்டனையை வழங்கி மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தார்.

2020இல் 1.147 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன், வாழைச்சேனையைச் சேர்ந்த நபரை பொலிஸார் கைது செய்து வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். 

விசாரணையின் பின்னர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு வழக்கானது 2022இல் மாற்றப்பட்டு அங்கு விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் சந்தேக நபர் குற்றவாளி என  நீதிமன்றத்தில் கடந்த 14ஆம் திகதி நிரூபிக்கப்பட்டதையடுத்து, தண்டனை தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

குறித்த நபரின் முதலாவது குற்றமான ஹெரோயின் போதைப்பொருள் தன் வசம் வைத்திருந்த குற்றத்துக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும்  செலுத்துமாறும் இரண்டாவது குற்றமான ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த குற்றத்தில் இருந்து விடுவித்து ஒரு இலட்சம் ரூபாய் அபராதத்தை செலுத்த தவறினால் 2 வருடம் சிறை தண்டனையை வழங்கி மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.