சவூதி அரேபியா மீது தொடரும் ஹூதி தாக்குதல்களால் சர்வதேச மசகு எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் மோதல்கள் தீவிரமடையலாம் என்ற அச்சத்தினால் ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை மே மாதத்திற்குப் பின் உச்சம் தொட்டுள்ளது.
ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 3.35 (3.08%) அமெரிக்க டொலரா அதிகரித்து 112.17 அமெரிக்க டொலராக விற்பனை ஆனதுடன், வர்த்தக நேரத்தின் இடையே அதிகபட்சமாக 112.55 அமெரிக்க டொலரைத் தொட்டது. இது கடந்த மே 18 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த விலையாகும்.
அமெரிக்க WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 2.68 (2.76%) அமெரிக்க டொலராக அதிகரித்து 99.83 அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவின் பல இலக்குகள் மீது நடத்திய தாக்குதல்களில், தம்மம் நகரில் உள்ள சிவிலியன் விமான நிலையத்தில் ஒருவரும், எண்ணெய் வளம் மிக்க பகுதி ஒன்றில் இருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சந்தையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள தனது தூதரக அதிகாரிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிகரித்து வரும் விலைகளைக் கட்டுப்படுத்த அமெரிக்க அவசர வெப்பமூட்டும் எண்ணெய் கையிருப்பில் மூன்றில் ஒரு பங்கை வழங்க ட்ரம்ப் நிர்வாகம் முன்வந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் சட்டவிரோத எண்ணெய் பரிமாற்றத்தில் ஈடுபட்ட கப்பல்கள் தீப்பற்றிய சம்பவங்களும், ஈரான் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ளன.
இந்நிலையில், உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பேசுவதற்காக அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சென் பீட்டர்ஸ்பர்க்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அடுத்த மாதம் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் கூடிய அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க புட்டின் சம்மதித்துள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.