இணைய உலகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் PHP (Hypertext Preprocessor) நிரலாக்க மொழியில் இரண்டு தீவிரமான சைபர் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய அரசாங்கங்களும் சைபர் பாதுகாப்பு நிறுவனங்களும் தங்களது இணையதளப் பக்கங்களை உடனடியாகத் தற்காலிகமாக முடக்குமாறு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்த தீவிர பாதுகாப்புக் குறைபாடுகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் Calif மற்றும் Wiz ஆகிய சைபர் பாதுகாப்பு நிறுவனங்களால் கண்டறியப்பட்டுள்ளன.
OpenAI நிறுவனத்தின் 'Patch the Planet' திட்டத்தின் கீழ் அதிநவீன ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்டறியப்படாமல் இருந்த இந்தக் குறைபாடுகள் சில வாரங்களிலேயே கண்டறியப்பட்டுள்ளன.
இணையத்தின் சுமார் 70% பகுதிகள் (WordPress, Drupal, Joomla, Magento உள்ளிட்ட பல தளங்கள்) PHP மொழியிலேயே இயங்குவதால், இது வரலாற்றில் கண்டறியப்பட்ட மிகக் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தக் குறைபாடுகள் ஹேக்கர்களுக்குச் சேவையகங்களின் கோப்பு முறைகள் அல்லது தரவுத்தளங்களை நேரடியாக அணுக அனுமதிப்பதுடன், தொலைநிலையிலிருந்தே கணினிக் குறியீடுகளைச் செயல்படுத்தும் அபாயத்தையும் ஏற்படுத்துகின்றன.
பின்லாந்து அரசாங்கம் தனது பொது இணையச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மேலும் நெதர்லாந்தின் கீழ் சபை மற்றும் அந்நாட்டின் பொதுச் சுகாதார நிறுவனத்தின் இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.
ஜப்பான் பிரதமர் சனாயே தகாய்ச்சி நாட்டின் பொது இணையதளங்கள் PHP மூலம் இயங்குகின்றனவா என்பதை விரைந்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் ஆகியன உரிய தீர்வுகளை உடனடியாகப் புதுப்பிக்க முடியாத அமைப்புகளை இணையத்திலிருந்து முற்றிலுமாக அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளன.
விக்கிப்பீடியாவை நிர்வகிக்கும் விக்கிமீடியா அறக்கட்டளை பல துணை அமைப்புகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. எடின்பர்க் நகர சபை மற்றும் பிபிசியின் சில நிகழ்ச்சிகளுக்கான தளங்களும் முடக்கப்பட்டுள்ளன.
PHP பவுண்டேஷன் தனது பிந்தைய பதிப்புகளுக்கான சீரமைப்புப் பேட்சை வெளியிட்டுள்ளது. PHP 8.1 அல்லது அதற்குப் பழைய பதிப்புகளைப் பயன்படுத்துவோர் உடனடியாகப் புதிய பதிப்புகளுக்குப் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மென்பொருள் மற்றும் சேவையகங்களை உடனடியாகப் புதுப்பிக்க முடியாத நிறுவனங்கள், அச்சுறுத்தல் முழுமையாகத் தவிர்க்கப்படும் வரை தங்களது சிஸ்டங்களை 'ஒப்லைன்' நிலையில் வைப்பதே பாதுகாப்பானது எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.