மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சனிக்கிழமை (17) இடம்பெற்றதுடன் மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 18 ம் திகதி வரை 92 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் மீண்டும் மாவட்டத்தில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா கணக்குபிள்ளை வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய ரவீந்திரன் நிரோஜினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் சம்பவ தினமான சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் வீட்டின் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை மாவட்டத்தில் கடந்த 2025 ம் ஆண்டு ஜனவரி  முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ம் திகதிவரை 147 பேர் தற்கொலை செய்து கொண்டனர் இந்த நிலையில் 2026 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஓக்டோபர் 18 வரை காலப்பகுதியில் 92 பேர் தற்கொலை செய்து கொண்டதுடன் கடந்த 12ம் திகதி தற்கொலை செய்வதற்கு கல்லடி பாலத்தில் இருந்து வாவிக்குள் குதித்த 19 வயது இளம் யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியதுடன் கடந்த 15 ம் திகதி சித்தாண்டியில் 21 வயது இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்

இவ்வாறு மாவட்டத்தில் மீண்டும் தற்கொலை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது இது தொடர்பாக மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்தி காரணங்களை கண்டறிந்து இந்த தற்கொலையை தடுக்க வழிகோலுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.