வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவில், பட்டிக்குடியிருப்பு கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழ்மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றான விண்ணாங்கம்பிட்டிக் கிராமத்தை மீளக்குடியமர்த்துவது தொடர்பாகவும், ஏம்பைக்குளம் கிராமத்திற்கான மின்னிணைப்பினை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் மகஜயர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் 18.10 2026இன்று நீதிக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதி கோசலை, இலங்கைத தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக் கிளையின் தலைவர் வைரமுத்து பூபாலசிங்கம், அப்பகுதி மக்கள் இணைந்து குறித்த மகஜர்களை நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளித்தனர்.

குறிப்பாக அப்பகுதி மக்களின் முறையீட்டிற்கு அமைவாக கடந்த 11.10.2026அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மீள்குடியமர்த்தப்படாமலுள்ள விண்ணாங்கம்பிட்டிப் பகுதிக்கும், மின்னிணைப்பு இன்றி மக்கள் இடர்படும் ஏம்பைக்குளம் கிராமத்திற்கும் நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், கோரிக்கைகளை எழுத்துமூலமாக தம்மிடம் கையளிக்குமாறும் அப்பகுதி மக்களிடம் தெரிவித்திருந்தார். அதற்கமைவாகவே 18.10.2026இன்று குறித்த மகஜயர்கள் இன்று நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த விண்ணாங்கம்பிட்டிக் கிராமத்தினை மீள்குடியமர்த்துவது தொடர்பிலும், ஏம்பைக்குளம் கிராமத்திற்கு மின்னிணைப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.