மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் அன்றாட தேவைகளுக்கும் பயன்பாட்டுக்கும் காணிகளை விடுவிப்பதில் வனவளத்துறை திணைக்களம் தொடர்ச்சியாகவே தடைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வவுனியா மாவட்டத்தில் கிவுல் ஓயா திட்டத்துக்கு வனவளத்துறை திணைக்களத்துக்கு சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் வனவளத்துறை மக்களின் பயன்பாட்டுக்கான காணிகளை விடுவிக்கும் போது ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் காணிகளை விடுவிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. வனவளத்துறை திணைக்களத்தின் செயற்பாடுகள் முற்றிலும் பாரபட்சமானது. தமிழ் பிரதேசங்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுகிறது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு வினவினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ், வனங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள, வன ஒதுக்கங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள, வன ஒதுக்கங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட பிரதேச செயலாளர் அலுவலகங்கள் எத்தனை?
பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு விடுவிப்பதற்கு உத்தேசித்துள்ள, இதுவரை பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள, காணிகளின் அளவு, அவை அமைந்துள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள், கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் கிராமங்கள் என்பன யாவை?
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வீரானைக்கல் விவசாய அமைப்புக்குச் சொந்தமான சுமார் 560 ஏக்கர் காணியை, வன ஒதுக்கமாகப் பிரகடனப்படுத்துவதற்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் முன்மொழிந்துள்ளதா?
காணி 1979ஆம் ஆண்டு முதல் பயிர்ச் செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்டு, 1983ஆம் ஆண்டு முதல் அதற்காக வருடாந்த காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதா? 2008 / 04ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக, மேற்படி காணியை விவசாயிகளுக்கு மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?
கிழக்கு மாகாணத்தில் வனவளத்துறை திணைக்களத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன், அண்மையில் பிரதமரிடம் முன்வைத்த கேள்விகளுக்கு ஒரு மாதகாலத்துக்குள் பதிலளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை. அந்த கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே காணப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று (24) அமைச்சுக்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வனவளத்துறை திணைக்களம் தயாராகவில்லை என்பது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. ஜனாதிபதியின் தீர்மானத்தையும் செயற்படுத்தாத அரச அதிகாரிகள் உள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீராணைக்கல் விவசாய நிலம் தொடர்பில் ஏறாவூர்பற்று பிரதேச சபை அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போது எமது கட்சியின் உறுப்பினர் சிறிநேசன் பல விடயங்களை முன்வைத்துள்ளார். பண்ணையாளர்களும் இந்த காணி தொடர்பில் தமது நிலைப்பாட்டையும் முன்வைத்துள்ளார்கள். ஆனால் இந்த நிலப்பகுதியை வனவளத்துறை திணைக்களத்துக்கு வழங்கும் வகையில் வர்த்தமானி பத்திரம் ஊடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தற்போது பதிலளித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வனவளத்துறை திணைக்களம் செயற்படும் முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது. பட்டிப்பளை பிரதேசத்தில் 700 ஹேக்கர் காணியை விடுவிக்கவுள்ளதாக தற்போது குறிப்பிடப்படுகிறது.
இந்த பகுதியில் வனவளத்துறை திணைக்களத்துக்கு சொந்தமான 1500 ஏக்கர் காணியை பெரும்பான்மையினத்தவர்கள் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளனர். தற்போது 1500 ஏக்கர் காணியை விடுவித்து அவற்றை அந்த சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கே வழங்க பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் மேய்ச்சல் தரைக்குரிய காணிகளை ஏன் விடுவிக்க முடியாது?
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் அன்றாட தேவைகளுக்கும், பயன்பாட்டுக்கும் காணிகளை விடுவிப்பதில் வனவளத்துறை திணைக்களம் தொடர்ச்சியாகவே தடைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வவுனியா மாவட்டத்தில் கிவுல் ஓயா திட்டத்துக்கு வனவளத்துறை திணைக்களத்துக்கு சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் வனவளத்துறை மக்களின் பயன்பாட்டுக்கான காணிகளை விடுவிக்கும் போது ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் காணிகளை விடுவிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. வனவளத்துறை திணைக்களத்தின் செயற்பாடுகள் முற்றிலும் பாரபட்சமானது.
திவுலான பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சல் நடவடிக்கைகளுக்கு கொண்டு செல்லுமாறு அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அங்கு சென்றால் வனவளத்துறை திணைக்களம் பண்ணையாளர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படுகிறது. யானை கட்டுப்பாட்டு அலகு ஒன்று அமைக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்துக்குள் போரைத்தீவுபற்று மற்றும் கிரான் ஆகிய பகுதிகள் உள்வாங்கப்படவில்லை. தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுகிறது. வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்குவதிலும் பாரபட்சம் காண்பிக்கப்படுகிறது என்றார்.