மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலையை முன்னிட்டு, அங்கு வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்: WhatsApp / Imo: +94 71 980 2822 அவசர அழைப்பு (Hotline): 1989 இந்நிலையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலினால் இதுவரை இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் அங்கிருக்கும் இலங்கையர்களுக்கு விசேட பாதுகாப்பு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பின்பற்றி அவதானத்துடன் செயல்படுமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. பஹ்ரைனில் தாக்குதல் – இலங்கையர்கள் பாதுகாப்பில் பஹ்ரைன் நாட்டில் இலங்கையர்கள் தங்கியிருந்த நகரொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அங்குள்ள இலங்கையர்கள் எவருக்கும் காயங்களோ அல்லது ஆபத்தோ ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை, அவசரத் தேவைகள் உருவாகும் பட்சத்தில் உடனடி தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்வதற்காக கூடுதல் விசேட அவசரத் தொலைபேசி இலக்கங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் தூதரக வழிகாட்டல்களை மட்டும் நம்பி செயற்படுமாறு அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.