மயிலத்தமடு–மாதவணைப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை நோக்கி நகர்வதைஅ நோக்கமாகக் கொண்டு திங்கட்கிழமை (19)  மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் பிற்பகல் 2.30இற்கு கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

இக்கலந்துரையாடலலை கிழக்கு மாகாண சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச.சிவயோகநாதன் ஏற்பாடு செய்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவணைப் பகுதியில் நிலவிவரும் மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பாக, அண்மைக்காலமாக அதிகரித்துவரும் அத்துமீறிய குடியேற்றங்கள், சட்டவிரோதச் செயற்பாடுகள் மற்றும் அவற்றால் உருவாகிவரும் நெருக்கடிகள் குறித்து நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

குறிப்பாக, இப்பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பாதிப்புகள், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களின் பாதுகாப்பு, நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூக, பொருளாதார மற்றும் நில உரிமை சார்ந்த பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராய வேண்டியுள்ளது.

இப்பிரச்சினை கால்நடைப் பண்ணையாளர்களை மாத்திரம் பாதிக்கும் ஒரு விடயமல்ல. இது மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மக்களின் வாழ்வாதாரம், காணிப் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய முக்கியமான பொதுநலப் பிரச்சினையாகும்.

எனவே, இப்பிரச்சினையின் தற்போதைய நிலைமையைப் புறநிலையாக ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையும் அனுபவங்களையும் கேட்டறிந்து, அனைத்துத் தரப்பினரினதும் ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் மாவட்டத்தின் சார்பில் உறுதியான தீர்மானங்களையும், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான பொதுவான செயற்றிட்டத்தையும் உருவாக்க வேண்டியுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு, மயிலத்தமடு–மாதவணைப் பிரச்சினையின் தற்போதைய நிலைமை தொடர்பான விசேட கலந்துரையாடலில் தாங்கள் தவறாது கலந்துகொண்டு, தங்களது பெறுமதியான கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் என்றும் அவர் விடுத்துள்ள அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.