சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளான ஆண், பெண் இருவரும் கணவன் - மனைவி உறவுடையவர்கள் அல்லர் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

சவூதியில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்து வந்த பங்களாதேஷ் பிரஜைகள் இருவரும் கடந்த 2023ஆம் ஆண்டு மக்கா பள்ளிவாசலுக்குள் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளுக்கு பிறகு  அவர்களுக்கு சவூதியில் கடந்த 14ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தகவல் வெளியிட்டது.

இந்நிலையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரும் கணவன் - மனைவி என சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் கணவன் - மனைவி அல்லர் என இருவரது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ஆணின் தந்தை கூறுகையில், வறுமை காரணமாக கடன் வாங்கி எனது மகனை சவூதிக்கு அனுப்பினேன். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை” என்றார்.

மேலும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்த பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்றும் அவருக்கு 4 வயது பெண்பிள்ளை  இருப்பதாகவும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அந்த ஆணைப் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவரது குடும்பத்தினர் ஊடாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்பாக தூதரகத்தின் மூலம் தங்கள் அரசுக்கு சவூதி தகவல் தெரிவிக்காதது குறித்து பங்களாதேஷ் கண்டனம் வெளியிட்டுள்ளது. 

மேலும், பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில் பல தரப்பினரும் சவூதி அரசாங்கத்துக்கு எதிராக  கண்டனக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.