நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த வடிகாலில் குதிரையொன்று தவறி வீழ்ந்ததையடுத்து, தீயணைப்பு படையினர் பெரும் போராட்டத்துக்குப் பின்னர் குதிரையை உயிருடன் மீட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. 

கடந்த சனிக்கிழமை (17) டெக்சாஸ் மாகாணத்தில் பிளானோ நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சில குதிரைகள் வேகமாக ஓடிய போது, அவற்றில் ஒரு குதிரை வீதி ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் குழியில் விழுந்துள்ளது. 

அந்தக் குழியின் அகலம் மிகவும் சிறியதாக இருந்ததால் குதிரையால் தானாக வெளியே வர முடியாதிருந்த நிலையில்,  தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அக்குதிரையை உயிருடன் மீட்டனர். 

குழிக்குள் இருந்த குதிரை மீட்புப் பணியின்போது துள்ளாதிருக்க, குதிரைக்கு கால்நடை மருத்துவர்கள் மயக்க மருந்து அளித்திருந்தனர். 

அதனையடுத்து, குதிரைக்கு காயம் ஏற்படாதிருக்க தீயணைப்பு படையினர் தடித்த தீயணைப்பு குழாய்களை குதிரையின் உடலை சுற்றிலும் பொருத்தினர். 

பின்னர், “வின்ச்” எனப்படும் கனரக இயந்திரத்தின் துணையோடு குதிரை குழியிலிருந்து பாதுகாப்பாக, பாரதூரமான காயம் ஏதுமின்றி, சிறிய கீறல்களுடன் வெளியே தூக்கி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.