கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களுக்கும் கொழும்பு மாநகர சபை அதிகாரிகளுக்கும் இடையில் சற்று முன் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
போராட்டம் நடைபெறும் பகுதியில் தேரர்களால் நிறுவப்பட்டிருந்த பௌத்த கொடிகள், அறிவிப்புப் பலகைகள் மற்றும் பதாகைகளை மாநகர சபை அதிகாரிகள் அகற்றுவதற்கு முயற்சித்ததைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, விஹாரமகாதேவி பூங்காவுக்குப் பொறுப்பான அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களை அணுகி, குறித்த பௌத்த கொடிகள் மற்றும் அறிவிப்புப் பலகைகளை அகற்றிக்கொள்ளுமாறும் அல்லது அவற்றை நிறுவுவதற்கான கட்டணத்தைச் செலுத்துமாறும் அறிவித்துள்ளனர்.
அவ்வாறு செய்யத் தவறினால், குறித்த கொடிகள், அறிவிப்புப் பலகைகள் மற்றும் பதாகைகளைத் தாங்களே அகற்றவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்புக்கு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனையடுத்து, பூங்காவுக்குப் பொறுப்பான அதிகாரிகள் அங்கு நிறுவப்பட்டிருந்த சில பதாகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும், அங்கிருந்த தேரர்களும் பொதுமக்களும் இணைந்து அகற்றப்பட்ட பதாகைகளை மீண்டும் அதே இடத்தில் நிறுவியுள்ளனர்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தி விஹாரமகாதேவி பூங்காவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு நிறுவப்பட்டிருந்த பௌத்த கொடிகள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.