மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டதாகக் கூறப்படும் மூன்று நுழைவாயில்களையும் மீண்டும் திறப்பதற்கும், அதற்கான நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி வழங்க வேண்டும். இதற்காக அரசாங்கத்தின் நிதி தேவையில்லை என்றும், பொதுமக்களின் பங்களிப்புடன் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர் சுட்டிக்காட்டினார்.

பௌத்தம் இலங்கைக்கு அறிமுகமான வரலாற்றுடன் தொடர்புடைய இந்தப் புனிதத் தலத்தின் வரலாற்று முக்கியத்துவம், அதன் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் தேவைகள் குறித்து இந்தியத் தலைவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டியுள்ளது. இதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கும் கடிதம் எழுதவுள்ளதாகத் குறிப்பிட்டார்.

மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அண்மையில் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றியபோது, அனுராதபுரம் புனித நகரத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரர் மற்றும் தற்போதைய பதில் அட்டமஸ்தானாதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரின் ஆலோசனைகளுக்கு அமைய முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அட்டமஸ்தானாதிபதி தேரர்களாக இருந்தாலும் இவ்வாறான விடயங்களைத் தன்னிச்சையாகத் தீர்மானிக்க முடியாது. அனுராதபுரம் புனித நகரம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்குக்கூட தனித்து தீர்மானம் எடுக்க முடியாது. இதற்கென நிபுணர்கள் அங்கம் வகிக்கும் ஆலோசனைக் குழுவொன்று காணப்படுவதுடன், யுனெஸ்கோவின் மரபுரிமைப் பாதுகாப்பு நடைமுறைகளையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

மிஹிந்தலையில் மிஹிந்து மகா சேய நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்கவிடம் இந்நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஆலோசனை கோரப்பட்டது. எனினும், ஆலோசனைக் குழுவின் அனுமதியுடனேயே அவற்றை முன்னெடுக்க முடியும் என அவர் அறிவுறுத்தியிருந்தார்.அரசுச் செய்திகள்

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி ஜனாதிபதியிடம் இரண்டு கடிதங்களை வழங்கியிருந்தேன். அவற்றில் மிஹிந்தலை தொடர்பான பத்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அநுலா சைத்தியம் தொடர்பிலும் தனியான கடிதமொன்றைக் கையளித்திருந்தேன். எனினும், இதுவரை அவற்றுக்குப் பதில் கிடைக்கவில்லை. 
மேலும், ருவான்வெலிசாயவின் மேற்கு திசை நுழைவாயிலை மூடாமல் திறந்து வைக்க வேண்டும். ஸ்ரீ மஹா போதியைச் சுற்றி நான்கு திசைகளிலும் நுழைவாயில்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றை மூடுவதால் அந்தத் திசை இருளடைவதாகவும், இது நாட்டுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மகா சங்கத்தினருக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நான் நம்புகின்றேன்.

மிஹிந்தலையில் தற்போது கிழக்குத் திசை நுழைவாயில் மாத்திரமே திறக்கப்பட்டுள்ளது. ஏனைய மூன்று நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டதாகக் கூறப்படும் இந்த நுழைவாயில்களை மீண்டும் திறப்பதற்கும் தேவையான நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதி அனுமதி வழங்க வேண்டும்.

மிஹிந்தலை அபிவிருத்திப் பணிகளுக்கு அரசாங்கத்தின் நிதி தேவையில்லை. பொதுமக்களின் பங்களிப்புடன் அவற்றை முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றேன். மிஹிந்து மகா சேயவை நிர்மாணிப்பதற்கும் அதன் கொத்துக் கலசத்தை அமைப்பதற்கும் ஏற்கனவே பெருமளவு நிதியைத் திரட்டியுள்ளேன். தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் உதவிகளைப் பெற்றுள்ளேன்.

மிஹிந்தலை இலங்கையின் பௌத்த நாகரிகத்தின் வரலாற்று அடித்தளமாகும். பௌத்தம் இலங்கைக்கு அறிமுகமான வரலாற்றுடன் தொடர்புடைய இந்தப் புனிதத் தலத்தின் வரலாற்று முக்கியத்துவம், அதன் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் தேவைகள் குறித்து இந்தியத் தலைவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டியுள்ளது.தீவுகள் ஆராயுங்கள்

இதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்குத் தனித்தனியாகக் கடிதங்களை எழுதவுள்ளேன்.

மிஹிந்தலையின் வரலாற்றுச் சிறப்பையும் தற்போது எதிர்கொள்ளும் அபிவிருத்தித் தேவைகளையும் அந்தக் கடிதங்களில் தெளிவுபடுத்தி, இப்புனிதத் தலத்தின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு இந்தியாவின் ஆதரவையும் சர்வதேச ரீதியிலான பங்களிப்புகளையும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பேன்.

எனவே, மிஹிந்தலையில் மூடப்பட்டுள்ள மூன்று நுழைவாயில்களையும் மீண்டும் திறப்பதற்கும் தேவையான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதி அனுமதி வழங்க வேண்டும். அரசாங்க நிதியுதவி தேவையில்லை. பொதுமக்களின் பங்களிப்புடன் பணிகளை முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்கினால் போதுமானது என்றார்.