வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள 'அவிஷ்க' எனப்படும் 'அல்பா' என்பவரின் இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்துச் சென்ற 'பண்டாரகம அசேல' என்பவரைப் பாணந்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர் வசம் இருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாணந்துறை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, ரைகம பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் அவிஷ்க எனப்படும் 'அல்பா'வின் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் இச்சந்தேகநபர் நேரடியாகத் தொடர்புடையவர் எனப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சந்தேகநபரின் வீட்டைச் சுற்றிவளைத்துப் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, அங்கு நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த துப்பாக்கி பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகப் பண்டாரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.